உன் பாத கொலுசாய்…
EPISODE – 1
Written by
Saipriya.A
மொபைலில் அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் தியா…
இதுவே வீடாக இருந்திருந்தால் அம்மாவின் சமையல் வாசனைக்கு தானாகவே எழுந்து இருப்பாள்.
சலிப்பாக எழுந்தவள் மொபைலை பார்த்தாள்…
அது மணி ஏழு என்று காட்டவே, “ஓ மை காட்! டைம் ஆயிடுச்சே!” என்று எழுந்தவள் குளியல் அறைக்கு ஓடினாள்.
குளித்து முடித்தவள் அவசர கதியில் தன் இன்ஸ்டன்ட் சமையலை முடித்தாள்…
வீட்டைப் பூட்டிக்கொண்டு ஆபீசுக்கு கிளம்பியவள், படிக்கட்டில் அமர்ந்து தன் சுட்டிக்குழந்தை அம்முவுக்கு மம்மு ஊட்டிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு அக்காவை தாண்டி சென்றாள்…
தியாவை பார்த்தவர், “என்ன தியா, ஆபீஸ் கிளம்பியாச்சா?” என்று வினவ,
சிரித்துக்கொண்டே தலையசைத்தவள், அம்முவுக்கு பாய் காட்டிவிட்டு ஸ்கூட்டியை கிளப்பினாள்…
கல்லூரி நாட்களில் தியாவை சந்தித்தவர்கள், இவள் இப்படி ஒருநாள் மௌன மொழி மட்டும் பேசுவாள் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்கள்…
தியாவை சுற்றி இருக்கும் தனிமை தான் அவளை இப்படி மாற செய்திருக்கிறது…
இதை விரும்பி ஏற்றதும் அவளேதான்…
ஓர் நிகழ்வு… அதன் தாக்கம் தான்…
இப்படி சொந்த நிலம் விட்டு அவளைப் பிரிந்து வர செய்தது… யாரும் வேண்டாம் என்று தனிமையை நாட வைத்தது…
ஸ்கூட்டியை எடுத்தவள் அலுவலகம் செல்ல சாலையில் கலந்தாள். பக்கவாட்டு கண்ணாடியை சரி செய்தவள், சற்று தூரத்தில் வரும் ரிஷியை பார்த்தாள்.
ரிஷி அவனது பைக்கை தியாவுக்கு பக்கவாட்டில் செலுத்தியபடி, “ஹாய் தியா” என்றான்.
சிநேகமாய் ஒரு புன்னகை சிந்தியவள், சாலையை பார்க்கலானாள்.
இது ஒன்றும் ரிஷிக்கு புதிதல்ல… அவனும் தியாவும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். ஒரே அப்பார்ட்மெண்டும் கூட… ரிஷியின் பால்கனியில் இருந்து பார்த்தால், தியாவின் பால்கனி நன்றாகவே தெரியும்.
தியா ஆபீஸ் சென்றடையும் வரை நிதானமாக வண்டியை ஓட்டினாள். “தப்பி தவறி கூட நம்மல பார்க்க மாட்டாளே!”, மைண்ட் வாய்ஸ் பேசிக்கொண்டே ரிஷி அலுவலகம் வந்து சேர்ந்தான்.
தியா… தேவதையோ என்று நினைக்கத் தோன்றும் ஒரு பெண்… சிரித்தால் கூடவே சிரிக்கும் கண்கள்… இன்னும் பேச மாட்டாளா என்று ஏங்க வைக்கும் இனிமையான குரல்… அளவான பேச்சு…
பார்த்த உடன் விழுந்தவன் தான் ரிஷி… இன்னும் எழுந்திருக்கவே இல்லை… அவனுக்கு எழ விருப்பமும் இல்லை…
ஒரே ஆபீஸில் இருந்தாலும் டீம் அவுட், பார்ட்டி எதிலும் அவளை பார்க்க முடியாது. அப்பார்ட்மெண்டில் யார் வீட்டு ஃபங்க்ஷனிலும் பார்க்க முடியாது. வீடு, ஆபீஸ், அத்தியாவசிய தேவைகளுக்கு எப்பொழுதாவது ஷாப்பிங்… இதுதவிர எங்காவது அவள் தென்பட்டால் அன்று மழை தான் கொட்டும்.
ஆரம்பத்தில் ரிஷியே, “திமிர் புடிச்ச பொண்ணா இருப்பாளோ!” என்றெல்லாம் நினைத்திருக்கிறான். அவன் சகாக்கள் கூறியதும் அதுவே… அப்புறம் தான் இவை தியாவின் சிறப்பியல்புகளாய் அவளைத் தனித்துக் காட்டியது.
எப்படியோ அவள் புன்னகைப்பதே போதும் என்று நினைத்தவன், அவளை பற்றி நினைத்துக்கொண்டே வேலையை பார்த்துக் கொண்டிருக்க, அவன் ஆருயிர் தோழன் அஷ்வின் அழைக்கவே நனவுலகத்திற்கு வந்தான்.
“ஹே என்னடா? இன்னிக்கு பிரேக்ல காஃபி குடிக்க கூட வராம சின்சியரா வேலை பாக்குற? உன் ஆளே இங்க மூணு தடவை காஃபி குடிக்க வந்தாச்சு!”, அஷ்வின் சொல்லி முடிப்பதற்குள் தன் காஃபி கோப்பையை எடுத்துக்கொண்டு ஒரு நொடி கூட வீணாக்காமல் காஃபி மெஷின் இருக்கும் இடத்திற்கு ஓடினான் ரிஷி.
“டேய்… டேய்… ஆருயிர் நண்பன்னு இன்ட்ரோ எல்லாம் போட்டுருக்காங்க எனக்கு… இப்படி உன் ஆளப் பத்தி இன்ஃபர்மேஷன் கொடுத்ததும் என கழட்டி விட்டுட்டு போறியே பாவி!” என புலம்பிக் கொண்டே போனான் அஷ்வின்.
“ஹாய் தியா” என்று மூச்சிறைப்பதை மறைத்துக்கொண்டு ரிஷி கையசைக்க, கோப்பையில் காஃபி நிரப்பிக்கொண்டு நிமிர்ந்த தியா, புன்னகையுடன் நகர்ந்தாள்…
“சுத்தம்… இப்படியே போனா ப்ரொபோஸ் பண்ண மாதிரி தான்…” என்று அஸ்வின் கிண்டலடிக்க…
“சிரிக்கறதுக்கும் உலை வைக்காம விட மாட்டியா?!” என்று அஷ்வினை ரிஷி கிள்ள…
“ஐயோ, அம்மா…” என்ற அஷ்வினின் அலரலுக்கு “டொய்ங்க்” என்று குட்டும் கிடைத்தது.
“மச்சான்… Girls முன்னாடி அடிக்காத டா… ஒரே ஷை ஷை ஆகுது ல…” என்று ரிஷி கொட்டியதால் கலைந்த முடியை ஸ்டைலாக தலையை ஆட்டுவது போல் சரிபடுத்தியபடி சமாளித்தான் அஷ்வின்.
“அதுக்கு நீ டீசண்டா நடந்துக்கணும் டா…” என்று சொல்லிக்கொண்டே அஷ்வினின் கையை ரிஷி முறுக்க…
“இவன் ஒருத்தன் ஆனா ஊனா அடிப்பான்… மச்சி… கூல் டவுன்… சரி அதைவிடு… எப்போ தான் ப்ரொபோஸ் பண்ண போறே?” என்று கேட்டான் அஷ்வின்.
“அட போடா… அவ தான் பேசவே மாட்டறாளே… ஹாய் சொன்னா கூட சிரிச்சிட்டே போய்டறா… கான்வர்சேஷன் ஸ்டார்ட் பண்ண சான்ஸ் கொடுத்தா தானே… ஓபனிங்லேயே எண்ட் கார்டுதான்…”
“அவ டீம் மெம்பர்ஸ்ட கூட கேட்டு பாத்துட்டேன் மச்சி… எல்லார்கிட்டயும் இவ்வளவுதான் பேச்சே… வொர்க் பத்தி மட்டும்தான் பேசுவாளாம்… ஆபீஸ்ல நோ க்லோஸ் ஃப்ரென்ட்ஸ்… அங்க அப்பார்ட்மெண்ட்ல நெய்பர்ஸ் கிட்டயும் பேசமாட்டா… யார் வீட்டுக்கும் போக மாட்டா… எல்லார்கிட்டயும் அதே ஸ்மைல் மட்டும் தான்…”
“டூத் பேஸ்ட் விளம்பரத்துல வர்ற மாதிரி ஈஈனு சிரிச்சுக்கிட்டு எவனாச்சும் வழிய போனான்னு வை… அப்படியே கான்வெர்சஷன் கட் பண்ணி ஆபீஸ் விஷயம் பேசி துரத்திடுவாளாம்…”
“எனக்கு என்ன பயம்னா… ஏதாவது ஏடாகூடமா பேசப் போய் கோவிச்சிட்டு சிரிக்கறதையும் நிறுத்திட்டானா என்னால அத சுத்தமா தாங்கிக்க முடியாது டா… அதுக்கு அவ எப்ப பேசுவான்னு வெயிட் பண்றது கூட நல்ல ஃபீலிங்கா தான் இருக்கு…” என்று ரிஷி ரொமான்டிக்காக சொல்லி முடிக்க…
“இது எங்கே போய் முடியுமோ?!” என்று தலையில் அடித்துக் கொண்டான் அஷ்வின்.
கொலுசு ஒலிக்கும்…
Comments
0 comments