செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 12 உன் பாத கொலுசாய்

4,190

உன் பாத கொலுசாய்…
EPISODE – 12
Written by
Saipriya.A


அதற்குப் பின்னர் எத்தனை தடவை முயன்றும், சூர்யாவிடம் பேசக்கூட தியா தயாராக இல்லை…
நாட்கள் இப்படியே நகர்ந்தன…

கல்லூரி படிப்பும் நிறைவுக்கு வந்துவிட, கடைசி செமஸ்டர் தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு, ரிசல்ட்டுக்காக அனைவரும் காத்திருக்க…

பவிக்கும் தினேஷுக்குமான காதல் தியாவின் உதவியுடன் பவி வீட்டில் சம்மதிக்க பட்டுவிட… சூர்யாவின் உதவியால் தினேஷ் வீட்டிலும் சம்மதம் கிடைத்து, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தினேஷின் சொந்த ஊர் பெங்களூர் என்பதால், அங்கேயே திருமணம் ஏற்பாடாகி இருந்தது.

காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் ஒன்றாக சேர்ந்து ஒரு பஸ் ஏற்பாடு செய்திருக்க, ‘தியா வருவாளோ மாட்டாளோ’ என்று பஸ்ஸில் ஏறாமல், சூர்யா கீழேயே நின்று யோசித்துக் கொண்டிருந்தான்.

“சூர்யா…! யாரை தேடற…? உள்ள ஏறுடா… பஸ் கிளம்பப் போகுது….” என்று அவன் நண்பர்கள் அழைக்க…

“இன்னும் ஒருத்தர் வரல… இருங்க…!” என்ற சூர்யா, தூரத்தில் வரும் தியாவை பார்த்ததும், “பஸ் எடுக்கலாம்…!!” என்று உள்ளே ஏறினான்.

தியாவை பார்த்தவுடன் அவளது தோழிகள், “ஹே… என்ன தியா… இவ்ளோ லேட்டா வர…!! நீ வரலையோன்னு பயந்திட்டோம் தெரியுமா… நீ இல்லாம போனா பவி எங்களை உண்டு இல்லை ஆக்கிடுவா…!!” என்று சிரிக்க…

“அது எப்படி நம்ம பெஸ்ட் பிரெண்ட் கல்யாணத்துக்கு வராம போய்டுவேன்…?” என்று தியா கண் சிமிட்டி சிரிக்க, பார்த்துக்கொண்டிருந்த சூர்யாவின் இதயம் அனல் பட்ட ஐஸ்கிரீமாய் உருகிக் கொண்டிருந்தது…

தியா ஒரு அழகிய வெள்ளை நிற ஜீன்ஸில், அதற்கு ஏற்ற ஒரு டிசைனர் டாப்பில் வேற லெவல் ஆக இருக்க, தன்னை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா…

அலைபாய்ந்த கூந்தலை இரண்டு பக்கமும் போனி டெயில் போட்டு அடக்கியிருந்த தியாவை பார்ப்பதற்கே, அவ்வளவு க்யூட்டாக இருக்க, “எப்படி தியா ஃபர்ஸ்ட் இயர் -ல பார்த்த மாதிரியே இருக்க…?” என்று அவளது தோழிகள் வியக்க…

“அப்படியா…?” என்றவள் சிரித்துக்கொண்டே இருக்கையில் அமர, பஸ் கிளம்பியது. பஸ்ஸின் குலுக்களில் நினைவுக்கு வந்த சூர்யா, பஸ்ஸின் ஸ்பீக்கரில், தன் மொபைல் ப்ளூடூத் -ஐ கனெக்ட் செய்தான்.

மன்னிப்பாயா…? மன்னிப்பாயா…?
ஒரு நாள் சிரித்தேன்…
மறு நாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே… மன்னிப்பாயா…?

என்று பஸ்ஸில் பாடல் ஒலிக்க… பஸ்ஸில் அனைவரும் விழிக்க, ஒருத்தன், “என்னடா இது…? பஸ் கிளம்பரப்போ சாமி பாட்டு போடுவாங்க, பார்த்திருக்கோம்…! இப்போ என்ன அப்பாலஜி சாங் எல்லாம் போடறாங்க…?” என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“யாரோட ப்ளேலிஸ்ட் பா இது…?” என்று கேட்க… “ஏன் நல்ல பாட்டு தானே…! இருக்கட்டும்…!!” என்று தியா தற்செயலாக சொல்ல, இதை கேட்ட சூர்யாவுக்கு ஒரே குளிர்ச்சியாக இருக்க, மொபைலில் லவ் சாங்காய் தட்டிவிட்டான்…

பஸ்ஸில் எல்லோரும் நடனமாடிக்கொண்டு குதூகலமாக இருக்க, தியாவின் பக்கத்து சீட் காலியாக இருப்பதைப் பார்த்த சூர்யா, கேஷுவலாக வந்து தியாவின் பக்கத்தில் அமர்ந்தான்.

அவள் இருந்தது பின் இருக்கை… அதில் தியா மட்டுமே அமர்ந்திருக்க, சூர்யா அமர்ந்ததை அவள் உணரவில்லை. அவளிடம் எப்படி பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிய சூர்யா, அவள் பக்கம் சற்று நெருங்கி அமர,
அப்போதுதான் சூர்யாவை பார்த்தாள் தியா…

அவனை பார்த்ததும் ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பி கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் தியா. வேண்டுமென்றே தன்னை அவாய்ட் செய்கிறாள் என்று சூர்யாவுக்கு புரிய, “ஆமா… உனக்கு என்ன அஞ்சலி பாப்பான்னு நெனப்பா…?” என்று கேட்டவன் சிரிக்க ஆரம்பிக்க…

கோபமாய் திரும்பிய தியா அவனை முறைக்க, சூர்யா உதட்டில் சிரிப்புடன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள், கஷ்டப்பட்டு எதுவும் பேசாமல், மொத்த கோபத்தையும் தன் விழிகளிலே காட்ட…

காதல் கொண்ட நெஞ்சத்திற்கு…
கோபப் பார்வையாய் இருந்தாலும்… காதலியின் பார்வை…
கசக்கவா செய்யும்…?

அதற்குள் அங்கு வந்த தியாவின் தோழி ஒருத்தி, சூர்யாவை பார்த்துவிட்டு, “ஏய்… சூர்யா…!! உனக்கு இங்கே என்ன வேலை…? இது என் சீட்…! நீ உன் சீட்டுக்கு போ…!!” என்று அவனை துரத்த…

எழவே மனமில்லாமல் மெதுவாக எழுந்தவன், தியாவை பார்த்துக் கொண்டே அவன் இருக்கைக்கு சென்றான்.

மண்டபத்தில் பஸ் சென்று நிற்க… மண்டபத்திற்கு வெளியில் நின்றிருந்த தினேஷ், வந்தவர்களை வரவேற்று அவர்களுக்கு அறைகளை காட்டினான்.

சூர்யாவை பார்த்ததும் அவனை கட்டிக்கொண்டவன், “முன்னாடியே வந்து இருக்கலாம் -ல மச்சான்…?” என்று கேட்க…

“தியா கூட டிராவல் பண்ற சான்ஸ விட முடியுமா…??” என்று சூர்யா சிரித்துக்கொண்டே கேட்க…

“டேய் தினேஷ்… இதை நீ ஏன்டா யோசிக்கல…?” என்று அவனையே தினேஷ் கேட்டுக்கொள்ள…

“சரி மச்சான்…! நீ பேசிட்டு இரு…! நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்…!!” என்ற சூர்யா அங்கிருந்து சிரித்துக்கொண்டே சென்றான்.

பெண்களுக்கு தனி அறைகளும், ஆண்களுக்கு தனி அறைகளும், ஒதுக்கப்பட்டிருக்க… களைப்பு தீர குளித்துவிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு, ஈவினிங் ரிசப்ஷனுக்கு ரெடியாகிக் கொண்டிருந்தனர்.

சூர்யா சீக்கிரம் ரெடியாகி வந்து, தியா இருக்கும் அறைக்கதவை தட்டினான். கிளம்பிக் கொண்டிருந்த தியா கதவை திறக்க, சூர்யாவை பார்த்ததும் கடுப்பானவள், “என்ன…?” என்று கேட்க…

“இல்ல…! பவி ரெடி ஆகிட்டாளா -ன்னு தினேஷ் கேட்டுகிட்டு இருந்தான்… கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுக்கணுமாம்…! நான் எப்படி போய் பாக்கறது…? நீயும் வந்தேன்னா… போய் பார்க்கலாம்னு தான்…” என்று சூர்யா இழுக்க…

“நான் போய் பார்த்துக்கறேன்… நீ கிளம்பு…!” என்று சொன்ன தியா, அவன் பதிலை எதிர்பாராமல், கதவை சாத்திவிட்டு சென்று விட…

‘விடுவேனா…?’ என்று சூர்யா மறுபடியும் கதவை தட்ட, “ஹேய்… போய் கதவ திறயேன் டி…” என்று கூட இருந்தவளை தியா போக சொல்ல…

“நான் மேக்கப் போட்டுட்டு இருக்கேன் -ல… நீயே திறயேன் தியா…” என்று அவள் கழன்று கொள்ள, வேறு வழியில்லாமல் போய் கதவை திறந்த தியா, மறுபடியும் சூர்யா அங்கு நிற்பதை பார்த்தாள்.

“இப்போ என்ன…?” என்று அவள் கேட்க,

“சொல்றதுக்குள்ள தான் கதவை சாத்திட்டு போயிட்டியே… அங்க போனதும் பவிக்கு ஃபோட்டோ ஷூட் முடிஞ்சதும், எனக்கு கால் பண்ணு… சரியா…?? அப்புறம் தான், தினேஷ ஃபோட்டோ எடுக்க சொல்லணும்…” என்று சூர்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“உன் நம்பர் இல்ல என்கிட்ட…” என்று தியா கூற,

“பரவால்ல… என்கிட்ட இருக்கே உன் நம்பர்…!” என்ற சூர்யா அவன் மொபைலை எடுத்து, நொடியில் அவளுக்கு கால் செய்துவிட்டு, “சேவ் பண்ணிக்கோ…! பை…!!” என்று சொல்லிவிட்டு செல்ல…

‘இவன் எதுக்கு என் நம்பர் சேவ் பண்ணி வச்சிருக்கான்…? ஓவரா தான் போறான்…! இருக்கட்டும்…!’ என்று நினைத்த தியா, ரூமை லாக் செய்து விட்டு வருமாறு அவள் தோழியிடம் சொல்லிவிட்டு மணமகள் அறைக்கு போனாள்.

பவி அங்கு கிளம்பி கொண்டிருக்க… தியாவை பார்த்ததும், ஓடி வந்து கட்டிக்கொண்டவள், “ஹேய்…! சாக்லேட் பின்ச்…!! சேம் பிங்க் கலர் டிரஸ்…!!!” என்று தியாவை பவி கிள்ள…

“ஏன் டி… கல்யாணம் ஆகுது…! இப்பவாச்சும் கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்கோ…” என்று தியா சிரிக்க ஆரம்பித்தாள்.

ஃபோட்டோகிராஃபர்ஸ் வந்து போட்டோ எடுக்க, பவியை சிரிக்க வைக்க, அவள் தோழிகள் மொக்கை ஜோக்குகளாய் சொல்லிக் கொண்டிருக்க, ஒரு வழியாய் ஃபோட்டோ ஷூட் முடிந்து, மணப்பெண்ணை மேடைக்கு அழைத்து சென்றனர்.

பவியும் தினேஷும் மேடையில் நின்று, வந்தவர்களை வணங்கி கைகூப்பி நிற்க, மணப்பெண் தோழியாக தியாவும், மணமகனுக்கு தோழனாய் சூர்யாவும் நின்றிருந்தனர்.

ரிசப்ஷனுக்கு வந்திருந்த எல்லா நண்பர்களும் கிஃப்ட் பாக்ஸ் களுடன், மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோ எடுத்துக்கொண்டு நகர… சூர்யா தியாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த தினேஷ், “மச்சான்… இவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்க கஷ்டமா இருந்தா… பக்கத்துல போய் நின்னுக்கோயேன்…!” என்று கூற…

“குட் ஐடியா மச்சி…!” என்ற சூர்யா, தியாவின் அருகில் சென்று நிற்க… தற்செயலாக பக்கத்தில் திரும்பிப் பார்த்த தியா சூர்யாவை கண்டு முறைக்க…

“கர்ச்சீஃப் வாங்க வந்தேன்…! தினேஷுக்கு ரொம்ப ஸ்வெட் ஆகுது… அதான்…!!” என்று சூர்யா சமாளித்தான்.

அவன் முகத்தை பார்க்காமல் அவள் கர்சீஃப்பை எடுத்து நீட்ட, அதை வாங்கிக் கொண்டு நல்ல பிள்ளையாய் தினேஷ் அருகில் சென்று நின்று கொண்டான் சூர்யா.

தினேஷ் நடந்ததைப் பார்த்து விட்டதால் சிரிக்க, சூர்யா எதையும் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல அங்கிருந்து கொண்டே தியாவை பார்க்கலானான்…

எல்லா நண்பர்களும் இறுதியில் க்ரூப் ஃபோட்டோவுக்கு நிற்க, அதான் சாக்கென்று சூர்யா, தியாவின் தலையில் இருந்து கொஞ்சம் மல்லிகை மொட்டுக்களை பறித்து, அதை தனது சட்டைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினான்.

பவியிடம் எதையோ சொல்லி தியா சிரித்துக் கொண்டிருக்க, சூர்யாவுக்கு அங்கிருப்பவர்கள் எல்லோரும் மறை(ற)ந்து போக, அந்த இடத்திலே அவளும் தானும் மட்டுமே இருப்பதாக தோன்றியது.

சிரித்துக் கொண்டே இருந்தவள் யதார்த்தமாக சூர்யாவை பார்க்க, சட்டென அவள் முகம் இறுக, பார்த்துக்கொண்டிருந்த சூர்யாவுக்கு என்னவோ போல் ஆனது.

தன்னையும் அறியாமல் மனம் தனிமையை நாட, மெதுவாய் அங்கிருந்து நகர்ந்தவன் யோசித்துக் கொண்டே போனான்.

“என்னதான் பிரச்சனை அவளுக்கு என்கூட…? நான் எந்த தப்பும் பண்ணல…! நார்மலா பேசினா கூட அவளுக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது…? தியாவுக்கு ஏன் என்ன பிடிக்கவே இல்லை…? என்னதான் பண்றது…??”

திடீரென்று ஒரு யோசனை உதிக்க, அதுதான் தியாவை அவன் வாழ்க்கையில் இருந்தே பறிக்கப் போகிறதென்று சூர்யா அப்போது உணரவில்லை…


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy