செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 5 உன் பாத கொலுசாய்

2,559

உன் பாத கொலுசாய்…
EPISODE – 5
Written by
Saipriya.A


நட்பிலே நாட்கள் கரைய, ரிஷியின் மனதில் காதல் நோய் முற்றிப் போயிருந்தது… மணிக்கணக்கில் அவள் வாட்ஸப் டீபியை பார்த்துக் கொண்டிருப்பான்… அவள் வாய்சை ரெக்கார்ட் செய்து வைத்துக் கேட்டுக்கொண்டிருப்பான்…

ஆனால், அவள் தன் காதலை உணர்வாளா? இல்லை, எல்லா ஆண்களைப் போல் தான் நீயுமா? என சொல்லிவிடுவாளோ என்று அவன் எண்ணாமல் இல்லை…

“பிள்ளையாரே, நீ மட்டும் என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணு… நான் உனக்கு நிறைய தேங்காய் உடைக்கிறேன்…” என்று கோரிக்கை வைத்தவன்,

“சண்டே அதுவுமா உன்னை பார்க்க கோயிலுக்கு வரேன்… நேர்ல வந்து உன்கிட்ட அப்ளிகேஷன் போடுறேன்… பாத்து சிறப்பா பண்ணிடு… சரியா…??” என்று மனதுக்குள் வேண்டியவன் கோவிலுக்கு செல்ல ஆயுத்தமானான்.

கோவிலுக்குள் நுழைந்தவன், தியா பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு, பிரசாதத்துடன் சற்று அருகிலிருந்த தூணடியில் அமர்ந்தான்.

பக்கத்தில் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க… அவர்களை வேடிக்கை பார்த்தவாறு இருந்தவனது செவிகளில் தியாவின் குரல் கேட்பது போல் இருக்கவே, குரல் வந்த திசையை நோக்கினான்…

அங்கே இருந்தது தியாவே தான்… அழகிய சிவப்பு நிற புடவையில் அவளைப் பார்த்தவன், ஒரு நிமிடம் இமைக்கவும் மறந்தான்… முதல் முறை அவளை புடவையில் பார்க்கிறான் அல்லவா…

அவனை அறியாமல் எழுந்து அவள் அருகில் சென்று பேச போனவன், “சூர்யா-ன்ற பெயருக்கு அர்ச்சனை பண்ணுங்க…” என்று தியா கூறியதைக் கேட்டதும், அசைவற்று அங்கேயே நின்றான்…

எவ்வளவு நேரம் அங்கு நின்றிருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை… தியா அர்ச்சனை முடிந்து ரிஷியை கவனிக்காமல் கோவிலை விட்டே சென்றிருந்தாள்…

ரிஷியின் மனது ஏனோ வலித்தது… “அன்னைக்கு காஃபி ஷாப்ல இந்த பேர கேட்டு தான டென்ஷனா கிளம்பினா…? இன்னிக்கு அதே பேருக்கு தான் அர்ச்சனை பண்றா…? அப்ப அர்ச்சனை பண்ற அளவுக்கு அவ்வளவு முக்கியமான ஆள் யாரா இருக்கும்…??”

என்னதான் இப்பொழுதெல்லாம் அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், “சூர்யா யார்…?” என்று நேரடியாக அவனால் தியாவிடம் கேட்க முடியவில்லை…

“இப்டியே பதில் தெரியாம எவ்வளவு நாள்தான் யோசிக்கிறது…? ஒரு நல்ல சந்தர்ப்பத்தில கேட்டுடலாமே…!” என்று மனதில் தோன்ற “தட்ஸ் பெட்டர்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டிற்கு சென்ற தியா, மனதில் ஏதோ ஒருவித நிம்மதி இருப்பதை உணர்ந்தாள்… முன்பு இருந்த பாரம் சற்று குறைந்து தான் இருந்தது…

“சூர்யா இப்பவாச்சும் நிம்மதியா இருக்கணும்… என் வேண்டுதல் வீண் போகக்கூடாது…!” என்று நினைத்தவள் அதே நினைவுடன் உறங்கிப் போனாள்…

                    ***************

ஆபீஸில் டூர் செல்வதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது… எல்லோரும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ப்ளான் போட ஆரம்பித்திருந்தனர்… ஆண்டு முழுவதும் வேலையிலே உழன்று கொண்டு இருப்பவர்களுக்கு, டூர் என்றால் ஆனந்தம் இருக்கத்தானே செய்யும்…?

கடந்த 2 வருடம், ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் சென்றுவிட்டதால், இந்த வருடம் ஏற்காடு போகலாம் என்று ஒருமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது…

“தியா…!” கேன்டீனில் அமர்ந்திருந்தவளை ரிஷி அழைக்க, “ஹேய்… ரிஷி… இங்க என்ன பண்றீங்க…?” என்று கேட்ட தியாவை பார்த்து முறைத்தவன், “ஹான்… இது கேன்டீன்…! யார் வேணாலும் வரலாம்…” என்றான் ரிஷி.

“ஹையோ… நான் அத கேக்கல ரிஷி… ஆபீஸ்ல எல்லாரும் பரபரப்பா டூர் போறத பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க… நீங்க என்னடான்னா இங்க இருக்கீங்கன்னு கேட்டேன்…!” என்று தியா சொல்லி முடிக்க…

“என்னது… டிஸ்க்ஸ் பண்ணிட்டு இருக்காங்களா…? ஏன் நீங்க வரலையா…?” ரிஷி அவசரமாக கேட்க…

“நோ… நான் எந்த டூருக்கு வந்து இருக்கேன்…? நீங்க போயிட்டு வந்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க… என்ஜாய் ரிஷி… என்றாள் தியா.

“தியா… இது உங்களுக்கே நியாயமா…? பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் கூட டூர் போனா தான் நல்லா இருக்கும்…? தனியா போறதுக்கு பேர் டூர் கிடையாது… சோலோ ட்ரிப்…

“நீங்க எந்த வருஷம் போகலையோ எனக்கு தெரியாது… நீங்க இப்போ வர்றீங்க… இல்லன்னா நானும் போகல…” என்று ரிஷி முகத்தை திருப்பிக்கொள்ள…

தியாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… இதுவரை யாருக்காகவும் எந்த முடிவையும் அவள் மாற்றிக்கொண்டதே இல்லை…

“ரிஷி.. ப்ளீஸ் நீங்க போங்களேன்…”  என்று தியா கெஞ்ச…

“தியா… ப்ளீஸ் நீங்க வாங்களேன்…” என்று ரிஷி கெஞ்ச ஆரம்பித்தான்…

கொஞ்சம் நேரம் யோசித்த தியா, “சரி ஓகே…!” என்று சொல்ல…

ரிஷி, “தேங்க்யூ… தேங்க்யூ… தேங்க்யூ..” என்று தியாவின் கையை பற்றி நன்றி சொல்லிக்கொண்டே இருக்க…

“போதும்… போதும்…” என்று தியா சிரிக்க ஆரம்பித்தாள்.

அவள் சிரிப்பதையே கொஞ்ச நேரம் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், “சரி தியா… முன்னாடியே பேக்கிங் லாம் பண்ணிடுங்க…! முக்கியமா… கடைசி நேரத்துல வரமுடியாது… அர்ஜன்ட் ஒர்க்னு எல்லாம் எஸ்கேப் ஆக கூடாது… டீல் ஆ?” என்று கூற…

“நோ… நோ… நா சொன்னா சொன்னதுதான்… கண்டிப்பா வருவேன்…” என்ற தியா, “சரி ரிஷி… நான் இப்போ ஒர்க் பாக்க போறேன்… அப்புறம் பார்க்கலாம்…” என்று கிளம்பினாள்.

அவள் சிரிப்புடன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி…

நமக்கு பிடித்தவர்கள்
நம்மால் சந்தோஷமாக இருந்தால்
அது தனி சந்தோஷம் தானே…?

ரிஷி ஆவலோடு எதிர்பார்த்த அந்த நாள் வந்தது… டூருக்காக ஏற்பாடு செய்திருந்த இரண்டு பஸ்களையும் ஆபிஸ் கேம்பஸிலேயே நிறுத்தி இருந்தனர்… எல்லோரும் தத்தம் லங்கேஜ்ஜுகளை வைத்துவிட்டு இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்…

“ரிஷி… உனக்கு என்ன… வழக்கம்போல விண்டோ சீட் தானே…” என்று அஷ்வின் ரிஷியிடம் கேட்டுகொண்டிருக்க பதில் சொல்லாமல் ரிஷி டென்ஷனாக அமர்ந்திருப்பதை பார்த்தவன், “என்னடா…? ஏன் டென்சனா இருக்க…?” என்று கேட்டான்.

“தியா வந்துட்டாளானு தெரில மச்சான்… பஸ் எடுக்க போறாங்க… ஒருவேளை இன்னொரு பஸ்ல ஏறி இருப்பாளோ…?” தலையில் கை வைத்துக் கொண்டான் ரிஷி…

அஷ்வின் பஸ்சை விட்டு இறங்கி பார்க்க, தூரத்தில் தியா வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன்,
“டேய் சீக்கிரம் கீழ இறங்குடா… தியா வந்துட்டா…” என்று அஷ்வின் சொல்லி முடிப்பதற்குள், பஸ்சை விட்டு கீழே இறங்கினான் ரிஷி.

“தியா… ரொம்ப சீக்கிரம் வந்துட்ட போல…” என்றபடி ரிஷி அவள் கையில் இருந்த லங்கேஜை வாங்க,

“ரிஷி… விடுங்க… நானே தூக்கிட்டு வரேன்… பரவால்ல…” என்று தியா மறுக்க,

“பார்த்தாலே தெரியுது… கஷ்டப்பட்டு தூக்கிட்டு வரீங்கன்னு… நான் உங்க ஃபிரண்டு தானே… நான் ஹெல்ப் பண்ண கூடாதா…” என்று ரிஷி முறைக்க…

“சரி சரி… நீங்களே எடுத்துட்டு வாங்க…” என்று தியா அவனிடம் அவளது லங்கேஜை கொடுத்தாள்…

பஸ்ஸில் ஏறி அவளது லங்கேஜை மேலே வைத்த ரிஷி, “தியா உங்களுக்கு எந்த சீட் வேணுமோ உட்கார்ந்துகோங்க…” என்றான்.

தியா விண்டோ சீட்டில் அமர்ந்து கொள்ள, அஷ்வினிடம், “மச்சான்… இந்த சீட்ல நீ உக்காரு… வா…” என்று ரிஷி கூப்பிட,

“நீ… விண்டோ சீட்… எனக்கு தர்றீயா…? என்ன மச்சான் மிராக்கிள் இது…?” என்றபடி வந்த அஷ்வின் பக்கவாட்டில் ஜன்னல் இருக்கையில் தியா உட்கார்ந்து இருப்பதை பார்த்தான்.

“மச்சான்… நீ நடத்து…” என்ற அஷ்வின் ரிஷி சொன்ன இடத்தில் உட்கார, பக்கத்தில் ரிஷி அமர்ந்துகொள்ள…

பஸ் அந்த இடத்தை விட்டு கிளம்பி நெடுஞ்சாலையில் கலந்தது…

அதிகாலை என்பதால் பஸ் கிளம்பியதும் அனைவரும் தூங்கி வழிந்து கொண்டிருக்க…

தியா மட்டும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தாள்…

அவளையே பார்த்துக்கொண்டிருந்த ரிஷி பேகிலிருந்து ஹெட்செட்டை எடுத்து இசையில் மூழ்கிக் கொண்டே அவளை பார்க்கலானான்…


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy